WELCOME
www.omnamashivaayaa.blogspot.com
ருத்ராட்ஷம் இறைவன் சிவனின் அம்சம். ருத்ராட்ஷம் அணிந்தால் சகல நலன்களும் கிடைக்கும். ருத்ராட்ஷம் இலவசமாக பெற உங்களது முகவரியினை sms அனுப்பவும். ருத்ராட்ஷம் அணிய விரும்புபவர்கள் மட்டுமே முகவரியினை கீழே உள்ள போன் நெம்பர்க்கு sms அனுப்பவும், ருத்ராட்ஷம் பெற்று அதை அணியாமல் வைத்திருந்தால் பாவச்செயலாகும்.
முருகனடிமை ராஜேந்திரன் muruganadimai108@gmail.com



சனி, 26 மே, 2012

சிவனடியார் ஹரதத்த சிவாச்சாரியார் புராணம்

                                                                   

     சிவனடியார் ஹரதத்த சிவாச்சாரியார் புராணம்

             புண்ணிய நதியாகிய காவேரியின் வடகரையில் கஞ்சனூர் என்று        ஒர்சிவஸ்தலம் இருக்கிறது. அந்த ஸ்தலத்தில் இன்றைக்கு ஸுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு தெருவில் வைஷ்ணவர்களும் மற்றொரு தெருவில் சிவபக்தர்களும் வாழ்ந்து வந்தார்கள். காச்யப கோத்ரத்தில் பிறந்த வாஸுதேவர் என்ற ஒர் பிராமணர் வைஷ்ணவர்களுக்கெல்லாம் ஆசார்யராக விருந்தார். அவர் மகா விஷ்ணுவிடம் பரம பக்தியுள்ளவர். மகாவிஷ்ணுவே தனக்குப் புத்ரனாகப் பிறக்க வேண்டுமென்று தவம் செய்தார். பக்கத்து அக்ரஹாரத்தில் வசித்த சிவபக்தர்களுள் ஒருவர், வீப்ரதீகர் என்பார், தனக்கு ஓர் ஸத்புத்ரி வேண்டித் தவமிருந்தார். இவ்விருவர் தவத்திற்கும் மகாவிஷ்ணுவானவர் திருப்தியடைந்து, ஏற்கனவே பரமசிவன் ஆக்ஞையும் அருளும் இருந்த வண்ணம், தனக்கேற்பட்ட 15 அவதாரங்களில் ஒன்றான ஸுதர்சனாவதாரமாக வாஸுதேவருக்குப் புத்ரராக அவதரிக்கத் திருவுளம் கொண்டார். மகாலக்ஷ்மியையும் ஸுப்ரதீகருக்குப் பெண்ணாகப் பிறக்கும் படி சொன்ணார். அதேப்பிரகாரம், வாஸுதேவருடைய பத்னி கர்ப்பமாகி, காலக்ரமத்தில் ஒர் சுபதினத்தில் ஐந்து கிரஹங்கள் உச்சமாகவிருந்த ஒர் சுபலக்னத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமாய் ஒர் புத்திரனைப் பெற்றாள். அந்த வேளை புஷ்பமாரி பெய்தது.
புத்ர ஜனனம் ஆனதைக் கேட்ட வாஸுதேவர் பரம ஸந்தோஷ மடைந்து பூதானம், கோதானம் முதலியன செய்தார். பதினோராம் நாள் புண்யாக வசனம் செய்து, பெரியோர்களைக் கொண்டு குழந்தைக்கு ஸுதர்சனர் என்று நாமகரணமும் செய்வித்தார்.
ஸுதர்சனர் என்ற குழந்தை வளர்பிறைச் சந்திரனைப் போல் வளர்ந்து வந்தது. இரண்டு வயதாகி வெளியில் நடக்கும் பருவம் வந்த போது, குழந்தை விபூதி ருத்ராக்ஷம் அணிந்தவர்கள் வசித்த பக்கத்துத் தெருவிற்கு அடிக்கடி ஓடிவிடும். அவர்கள் காவேரியில் ஸ்நானம் செய்து திரும்பி வருகையில் அவர்களுக்கு நமஸ்காரம் செய்து அவர்களுடைய பாத தூளிகளைத் தன் சிரஸில் போட்டுக் கொள்ளும், தனக்கும் விபூதியிடும்படிக்கும், ருத்ராக்ஷம் கொடுக்கும் படிக்கும் அவர்களைப் பிரார்த்திக்கும். இரண்டு வயது குழந்தை இவ்வளவு பக்தியுடன் கேட்பதைப் பார்த்துப் பரம ஸந்தோஷமடைந்து ஒவ்வொருவரும் அதற்கு விபூதியிடுவார்கள். உடனே குழந்தை சிவாலயத்திற்குப் போய் அக்னீச்வர மகாலிங்கத்தையும் கற்பகாம்பிகையையும் பிரதக்ஷண நமஸ்காரம் செய்து ஹரஹரவென்று கோஷிக்கும். வைஷ்ணவ குலத்திற் பிறந்து இச்சிறு குழந்தை விபூதி ருத்ராக்ஷம் தரித்து சிவபக்தியில் ஈடுபட்டதைப் பார்த்து சைவப்ராம்மணார்களெல்லோரும் ஆதியில் மகாதேவரைத் தனது நேத்ரமலரால் பூஜித்த விஷ்ணுவே, உலகத்தில் சிவபக்தியை நிலைநாட்டுவதற்காக அவதரித்தாரோவென்று அதிசயித்தார்கள். குழந்தை சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் போகும் நேரங்களில் தவிர மற்ற வேளைகளில் சிவாலயத்திலும், சிவபக்தர்களோடும் இருந்து வளர்ந்தது.
குழந்தையின் நடத்தையையும் செய்கைகளையும் வாஸுதேவர், குழந்தையின் விளையாட்டென்றே பல நாள் நினைத்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல அவர் மனம் வருந்தியது; குழந்தையைக் குளிப்பாட்டி நல்ல ஆடையுடுத்தி, ஆவரணங்கள் போட்டு, நாமமும் ஸ்ரீ சூர்ணமும் இட்டுத் தாயார் விளையாட விட்டால், வெளியிற் சென்ற குழந்தை உடனே நாமத்தை யழித்துவிட்டு விபூதி பூசிக் கொண்டு சிவன் கோயிலுக்குப் போய் தர்சனம் செய்து விட்டு ருத்ராக்ஷ மாலையுடன் வீட்டுக்கு வரும். பிதா குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு “என் கண்ணே, இனிமேல் சிவன் கோவிலுக்குப் போகாதே, இது போல் சாம்பலை வாரிப் பூசிக் கொள்ளாதே; நம்முடைய தெய்வமான ஸ்ரீ மகாசிஷ்ணுவின் பாதத்தையே பூஜிக்க வேண்டும்; நம் குலத்திற்கேற்பட்ட ஸ்ரீ சூர்ணம் தான் போட வேண்டும்”. என்று அன்புடன் உபதேசித்தார். ஆனால் குழந்தையின் குணம் மாறவில்லை; வாஸுதேவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
இப்படியிருக்க குழந்தைக்கு ஐந்தாம் வயது வந்தது. வெகு விமரிசையாகப் பூணூல் கல்யாணம் நடத்தி வைத்தார். குல ஸம்பிரதாயப்படி த்வாதச நாமங்களும் இட்டு, மறுபடியும் மடியில் வைத்துக் கொண்டு “அப்பா ஸுதர்சனா, இது வரையில் இருந்தது போல் இனியும் இராதே, உனக்குப் பூணூல் போட்டாகி விட்டது. சிவன் கோவிலுக்குப் போனால் மகாபாபம்; விபூதியிட்டவர்களைக் கண்டால் ஸ்நானம் செய்ய வேண்டும், அப்படியிருக்க நீயே விபூதி விட்டுக் கொள்ளலாமா? இனி மேலாவது நமது குலாசாரப்படி நாமமும் ஸ்ரீ சூர்ணமும் இட்டுக் கொண்டு மகாவிஷ்ணுவைப் பூஜித்துக் கொண்டிரு” என்று பலவாறு உபதேசித்தார்.
சிவபக்தியை ஸ்தாபிக்க வந்த மூர்த்தியின் செவியில் இந்த உபதேசம் ஏறுமா? பிதா வெளியில் போனதும் பாலனும் வெளியே போய் நாமங்களை யழித்துவிட்டு விபூதியை நன்றாக உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் பூசிக் கொண்டு சிவாலயம் போய் விட்டான். ஸாயந்திரம் விபூதி ருத்ராக்ஷத்துடன் வீட்டுக்குத் திரும்பி வந்ததைப் பார்த்த பிதாவிற்குக் கடுங்கோபம் வந்து விட்டது. அக்ரஹாரத்தில் வைஷ்ணவர்கள் எல்லாரும் தங்கள் குலத்தைக் கெடுக்க வந்த ஒரு கோடாலிக் காம்மென்று குழந்தையைக் கோபித்தார்கள். வாஸுதேவர் பையனை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தார். அடித்தும் என்ன? பிதா மறைந்த ஸமயம், பாலன் கட்டுகளை யவிழ்த்துக் கொண்டு சிவாலயம் போய் விட்டான்.
வாஸுதேவர் நரஸிம்மரூபமாக மாறினார். புத்ர வார்ஸல்யம் நீங்கிற்று. பையன் தன் வார்த்தைக்கு அடங்கி நடக்கும் வரையில் வீட்டுக்கு வரக்கூடாதென்றும், அவனுக்கு அன்னம் போடக் கூடா தென்றும் கட்டளை விதித்தார். பெற்ற தாய் மனம் நொந்தாள். பாலன் வழக்கம் போல் மத்யான்னம் வீட்டுக்கு வந்து “அம்மா பசிக்கிறது சாதம் போடு” என்று சொன்னான். பெற்ற தாய் மனம் புழங்கினாள். “என் கண்ணே, நீ யேனடா அப்பா வார்த்தையைக் கேட்காமலிருக்கிறாய்? அப்பா மனம் கோணாமல் நீ நடக்கும் வரையில் நீ வீட்டுக்கு வரக்கூடாதென்றும் நான் உனக்கு அன்னமிடக் கூடாதென்றும் ஆக்ஞை விதித்திருக்கிறரே. அவர் உனக்கு பிதா வல்லவா? அவர் வார்த்தையை நீ கேட்க வேண்டாமா? அவர் எனக்கு தெய்வமல்லவா? அவர் கட்டளையை நான் எவ்வாறு மீறுவேன்; நீ பசிக்கிறது என்று சொல்ல என் மனம் தவிக்கிறதே; பெற்ற வயிறு ஸங்கடப்படுகிறதே’ யென்று பிரலா பித்தாள். பாலன் தாயை பார்த்து “அம்மா! அப்பா வார்த்தையின்படி நடப்பது தான் உங்கள் கடமை; நான் வெளியே போகிறேன். உலகத்திற்கெல்லாம் மாதாபிதாக்களான பார்வதி பரமேச்வரனை வழிபடுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்று தேற்றி, தாயை நமஸ்கரித்து வெளியே வந்து நேராக அக்னீச்வரர் ஆலயம் சென்றான்
பாலன் நேராக அக்னீச்வரர் ஆலயம் சென்றான் ஸ்ரீ அக்னீச்வரரையும் கற்பகாம்பிகையையும் பிரதக்ஷண நமஸ்காரம் செய்து அன்கீச்வரர் ஆலயத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கெதிரில் தியானத்தில் அமர்ந்தான். பையன் தியானத்தில் அமர்வது ஸகஜமானதால் இரவு பத்து நாழிகைக்கு மேல் கோவில் அர்ச்சகர்கள் கதவைச் சாத்திக்கொண்டு அவர்கள் வீடு சென்று விட்டார்கள் சிறிது நேரத்தில் பையன் எழுந்து பரமசிவனைப் போற்றுவான் ஆயினான் “ஹே மகாப்ரபோ! நான் தங்களையே சரணமடைந்தேன். என்னுடைய சரீரத்தைப் பெற்றெடுத்த தாய் தந்தையரை விட்டு வந்தேன். பிதாவாகிய தாங்கள் தான் இனி எனக்குப் பிதா. ஜகன்மாதாவாகிய கற்பகாம்பிகையே எனக்கு மாதா. ஸ்ரீ விக்னேச்வரரும் ஸுப்ரமணியரும் எனது சகோதரர்கள். பிரதம கணங்கள் தாம் எனது தோழர்கள். அடியேனை ஆட்கொள்ள வேண்டும். பிதா வார்த்தையைக் கேட்காத பையனுக்கு அருள் செய்யமாட்டேன் என்பீரோ, அதோ அடுத்த பிராகாரத்தில் சிவாபாரதம் செய்த பிதாவின் காலை வெட்டின ஸ்ரீ சண்டேச்வரர் உட்கார்ந்திருக்கிறார். எனது விதி நான் கஷ்டப்படத்தான் வேண்டுமென்பீரோ, விதியை மாற்ற உமக்கு சக்தி யுண்டென்பதற்கு ஸாக்ஷியாக மார்க்கண்டேயர் இருக்கிறார். நான் ஒரு சிறு பையன் விதிப்படி உங்களைப் பூஜை செய்யவில்லை யென்பீரோ, அது என் குற்றமல்ல; ஸாக்ஷாத் விஷ்ணு பிரம்மாதியர் இன்னமும் தங்கள் திருவடியையும் முடியையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், யாவர் தான் தங்களுக்கு அங்க பூஜை செய்ய முடியும்? தாங்கள் கருணை புரிந்தாலன்றி நான் இவ்விடம் விட்டு அகலேன். இவன் மிகவும் பிடிவாதமுள்ளவனாக விருக்கிறான் என்று கோபித்திச் சபிப்பீரோ, சாக்கடைப் புழுவாகப் போகும்படி சபித்தாலும் எனக்கு ஸந்தோஷம் தான், இதே இடத்திற் கிடந்து சிவபக்தர்கள் பாதங்களில் நசுக்குண்டு தங்கள் லோகம் வந்து சேர்வேன். நான் இவ்வளவு வேண்டியும் தங்களுக்கு என்மீது கருணையேற்படவில்லையா! என் போன்ற அபலைகளுக்கு அருள் செய்யாவிடில் கிருபா ஸமுத்ரம் என்ற பெயர் தங்களுக்கு நிலைக்குமா? குழந்தை யழுவதைப் பார்த்து மனம் இரங்காத தாய் தந்தையர் உண்டா? என்று பலவாறு போற்றிப் புகழ்ந்து இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான்.
பகவான் கற்பகாம்பியைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். லோகமாதாவாகிய கற்பகாம்பிகையும், குழந்தையை மேலும் சோதிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டாள். உடனே பகவான் குழந்தையின் மனப்பான்மையின் படி அதன் சகோதரர்கள் விக்னேச்வரர் ஸுப்ரமண்யரோடும், தோழர்கள் பிரதமகணங்களோடும், முனிவர்கள் வேதமோத தும்புரு நாரதாதிகள் கானம்பண்ண, தேவர்கள் புஷ்பமாரி பெய்ய, பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் காட்சி யளித்தார் குழந்தையின் கண்களுக்குத் தங்களைத் தரிசிக்கவல்ல சக்தியையும் கொடுத்தார். குழந்தை யெழுந்து விழந்து நமஸ்கரித்து மெய்மறந்து நின்றான். பரமசிவன் பாலனைத் தன் மடிமீதிருத்தி உச்சிமுகர்ந்து ஆலிங்கனம் செய்து கொண்டார். குழந்தைக் குற்ற துயரம் என்ன வென்று கேட்டார். குழந்தையும் ஈச்வர தர்சனம் கிடைத்த பின் தனக்கு யாதொரு குறையும் இல்லையென்று சொல்லி விட்டான். “அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று சொன்னார். குழந்தையும் அந்தக்ஷணம் முதல் பகவானுடைய திருவடிகளை விட்டுப் பிரியாத வரம் கேட்டான். கற்பகாம்பிகை குழந்தையின் ஞான விசேஷத்தைக் கண்டு மனம் பூரித்தாள். பரமேச்வரன் “உனக்கு இருந்த வருத்தத்தை நான் அறிவேன், உனக்கு ஸகல சாஸ்திரங்களிலும் தேர்ச்சி வரும்படி அருள்புரிகிறேன்” என்றார். பையன் திருப்தி யடையவில்லை “எத்தனை சாஸ்திரங்கள் படித்தாலும் அதன் பயன் தங்களை யறிவதுதானே; தங்களை நேரில் கண்ட அடியேனுக்கு சாஸ்திர ஞானம் ஏதும் தேவையில்லை” யென்று சொல்லி விட்டான். பகவான் அவனை ‘வேண்டும்’ நிலமை வந்து விட்டது. ‘குழந்தாய்! ஸகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் உனக்கு அருள் செய்கிறேன். நீ உலகத்தில் சைவ ஸ்தாபனம் செய்து, சிவபரத்வம் போதித்து கீர்த்தியுடன் சிலகாலம் வாழ்ந்து வருவாய். கால க்ரமத்தில் உன்னை நான் அழைத்துக் கொள்ளுகிறேன்’ என்று அருளி, தனது மலர்க்கையால் குழந்தையை ‘ஸர்வக்ஞோபவ’ என்று அனுக்ரஹித்தார். உடனே ஸகல வேதங்கள், உபநிஷத்துக்கள், ஆகமங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் எல்லாம் குழந்தையின் ஹ்ருதயத்தில் வந்து லயித்தன. குழந்தைக்கு உபதேசம் செய்யும் பொருட்டு பிரத்யேகமான தக்ஷிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராக்ஷ மாலையணிந்து பஞ்சாக்ஷர உபதேசம் செய்து, ஸ்படிகலிங்கம் கொடுத்து (ஹரதத்தர் புஜித்த சிவலிங்கம் தனியாகக் கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது) சிவபூஜா வித்யையும் தாமே உபதேசித்தார். ‘ஸுதர்சனன்’ என்ற பெயரை மாற்றி ‘ஹரதத்தர்’ என்ற திவ்ய சிவ நாம தீக்ஷையும் செய்தார். தேவர்கள் புஷ்பமாரி பெய்தார்கள். “இனி நீ உன் கிருஹம் சென்று, உன் பிதாவையும் இதர வைஷ்ணவர்களையும் வாதில் வென்று, சிவ பரத்வம் ஸ்தாபித்து, சிவபக்தியை நிலைநாட்டு வாயாக!” என்று திருவாய் மலர்ந்தருளினார். பையன் பரமானந்தமடைந்து சுருதி வாக்யங்களால் பகவனை ஸ்துதித்தான். பகவான் மறைந்து அருள, பையனும் சிவாக்ஞையை மேற்கொண்டு வீட்டுக்குச் சென்றான்.
வீட்டில் மனக்கவலையால் தூங்காது விழித்திருந்த தாயார் குழந்தையின் குரலைக் கேட்டதும் ஓடோடியும் போய்க் கதவைத்திறந்து குழந்தையை அணைத்து முத்தமிட்டாள். பிதாவும் எழுந்து வந்தார்; பையனுடைய சிவ ஸ்வரூபத்தை காணவே அடங்காக் கோபம் கொண்டு சீறினார்.சிவ சின்னங்கள் அணிந்த துரோகி தன் வீட்டுக்குள் அடி வைக்கக்கூடாதென்று விரட்டினார். ஹரதத்தரோ, பொறுமையுடனும் புன் சிரிப்புடனும் “ஆறு முனிவர்களின் சாப வசப்பட்ட பிராம்மணர்களில் நீரும் ஒருவர் போலும்! ஸ்ரீ மகா விஷ்ணுவே விபூதி ருத்ராக்ஷமணிந்து சிவபெருமானைத் தனது நேத்ர கமலத்தால் பூஜித்தார் என்ற விஷயம் உமக்குத் தெரியுமோ? அதற்கு ஆதாரமான சுருதியை நீர் படித்திருக்கிறீரோ அல்லது நான் சொல்லவோ?” என்றான்.
பையனுடைய வார்த்தைகளைக் கேட்ட பிதா பிரமித்தார், திடுக்கிட்டார். ஐந்து வயது பூர்த்தியாகாத பாலன் சுருதி சொல்லலாவது! அவருக்கு ஒன்றும் புரியவில்லை. குழந்தை ஸர்வக்ஞன் ஆனதை அவர் எப்படி அறிவார்! குழந்தையை ஏமாற்றிவிடலாம் என்றெண்ணி “விஷ்ணு அவ்வாறு செய்தது யதார்த்த பூஜையல்ல, உலகத்தை ஏமாற்றவே அவ்வாறு செய்தார்” என்றார். குழந்தை ‘ஓகோ அப்படியா! அதற்குத் தான் ஆதாரமாக ஒர் சுருதி வாக்யம் சொல்லுமே. கேட்போம் விஷ்ணுவிற்கு பரத்வம் சொல்லும் வேதவாக்யங்களைச் சொல்லும் கேட்போம்” என்றான். பிதா ‘இது ஏதோ விபரீதமாக விருக்கிறதே யென்று விழித்தார். இதற்குள் பொழுது புலர அக்ரஹாரத்து ஜனங்களும் கூடினார்கள். தர்க்கம் முற்றியது. வைஷ்ணவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஹரதத்தர் உடனுக்குடன் பதில் சொன்னார். இந்த அதிசயத்தைக் கேட்ட சைவ ப்ராமணர்களும் அங்கே போந்து ஹரஹர கோஷம் செய்து ஹரதத்தரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.


வைஷ்ணவர்கள் பார்த்தார்கல், இந்தப் பாலன் உயிருடனிருந்தால் தங்கள் மதத்திற்கே ஆபத்தென்பதை யணர்ந்தார்கள். ஆகவே ஒர் யுக்தி செய்து “அட பயலே, சாஸ்திரங்களில் கரை கண்டவன் போல் பேசுகிறாயே, பழுக்கக் காய்ச்சின இரும்புப்பீடத்தின் மீதிருந்து, சிவபரத்வ நிரூபணம் செய்வாயானால் நாங்கள் ஒப்புக் கொள்கிறோ” மென்றார்கள். ஹரதத்தர் அவ்விதமே செய்ய ஒப்புக் கொண்டு, அக்னீச்வரர் ஆலயத்தில், வேண்டிய ஏற்பாடுகள் நடக்கட்டுமென்றார். அதற்கு வைஷ்ணவர்கள் “அது கூடாது; அரன் கோயிலுக்கு நாங்கள் வர மாட்டோம். உனக்குத் திறமையிருந்தால் வரதராஜர் ஸந்நிதியிலேயே சொல்வதற்கென்ன” வென்று ஏசினார்கள். ஹரதத்தர் அதற்கும் உடன்பட்டார்.
வைஷ்ணவர்களுக்குப் பரம ஸந்தோஷம் குலத்ரோகியான பையன் ஒழிந்து விடுவான் என்று மன நிம்மதியடைந்தார்கள். வரதராஜர் ஸந்நிதியில் அகலமாகவும் ஆழமாகவும் குழிவெட்டி பெருந் தீ மூட்டினார்கள். நடுவில் முக்காலி போடப்பட்டு, உருகுந்ததருவாயில் பழுக்கக் காய்ந்து நின்றது. பலபல ஊர்களிலிருந்தும் வைஷ்ணவர்களும் சைவர்களும் லட்சக்கணக்கான ஜனங்கள் வந்து கூடினார்கள். ஆனால் ஒருவராவது தீக் குழிக்கு 100 அடி தூரத்தில் கூட நெருங்க முடியவில்லை.
குறித்த வேளையில் ஹரதத்தர் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, விபூதி பூசி, ருத்ரக்ஷம் அணிந்து, சிவபூஜை செய்து சிவாலயம் சென்று அக்னீச்வரரையும் கற்பகாம்பிகையையும் வலம் வந்து நமஸ்கரித்துப் பின் வரதராஜர் கோயில் வந்து சேர்ந்தார். சைவப்ராம்மணர்கள் ஸாக்ஷாத் சிவபிரானுடைய தேஜஸ்ஸுடன் விளங்கிய ஹரதத்தரைப் பார்த்ததும் ஹர ஹர கோஷம் செய்தார்கள். ஹரதத்தர் வரதராஜரை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்து, “ஹே ஸ்வாமின்! நான் தங்கள் ஸந்நதியில் ஸர்வ வேத சாஸ்திர முறைப்படி சிவனே பரம் என்று ஸ்தாபிக்கப் போகிறேன். சிவனே பரம் என்பது உண்மையானால், சிவனுடைய திருவடியில் தாங்கள் அர்ப்பணம் செய்து சிவனைப் பூஜை செய்த்தும் உண்மையானால் இந்த அ க்னிக் குழி-மலர்கள் பரப்பின குழி போல் குளுமையாக இருக்கட்டும்! இந்த இரும்புப் பீடம் ஜில்லென்று சந்தனப் பீடம் போலிருக்கட்டும்” என்று பிரார்த்தித்து, பழுக்கக் காய்ந்த இரும்பு பீடத்தின் மீதேறி இனிது அமர்ந்தார். பீடம் செந்தாமரை மலைபோல் மெத்தென்றிருந்தது


ஹர ஹ ர நம: பார்வதீ பதயே!
ஹர ஹர மகா தேவ !!


வேதங்களிலிருந்தும் சாஸ்திரங்களிலிருந்தும் உபநிஷத்துக்கள், ஆகமங்கள், புராணங்கள் எல்லாவற்றி லிருந்தும் ஆதாரங்களைச் சரமாரியாகப் பொழிந்து …….. பரமேச்வரனே பரம், பரமேச்வரனே பரம், பரமேச்வரனே பரம்…. என்று மும்முறை ஸத்யம் செய்து தேஜோமயமாகப் பிரகாசித்தார். இந்த அற்புதத்தைக் கண்ட ஸகல ஜனங்களும் வைஷ்ணவர்கள் உள்பட ஹர ஹர வென்று கோஷித்தார்கள். ஸ்ரீ ஹரதத்தர் சிவபிரானே யென்று துதித்து, அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள். பிதாவும் பையனுடைய பாதத்தில் விழுந்து தன் பிழையை பொறுக்குமாறு வேண்டினார். தனக்கும் மற்ற வைஷ்ணவர்களுக்கும் தகுந்த பிராயசித்தம் சொல்லும் படிக்கும் சிவதீக்ஷை செய்யும்படிக்கும் வேண்டினார்.
சங்கு சக்ரங்களால் சுடப்பட்டவர்க்கு விபூதி உத்தூளன திரிபுண்டாமே பிராய: சித்தமென்று சொல்லி, எல்லோரையும் காவேரியில் ஸ்நானம் செய்து வரச் சொல்லி பிதாவுக்கும் மற்றவர்க்கும் விபூதியிட்டு, ருத்ராக்ஷம் கொடுத்து, பஞ்சாக்ஷர உபதேசம் செய்து சிவதீக்ஷை செய்து ஸ்படிகலிங்கம் கொடுத்து, சிவபூஜா விதியையும் உபதேசித்தார். அன்று முதல் எல்லா வைஷ்ணவர்களும் சிவபூஜைய்லும் சிவபக்தியிலும் ஈடுபட்டுச் சைவர்களானார்கள்.
ஸ்ரீ ஹரதத்தர் சிவபரத்வம் ஸ்தாபித்த மகிமையும், ஸர்வக்ஞராக விளங்கின மகிமையும் நாடெங்கும் பரவியது. பாண்டிய நாட்டரசன் சிவலிங்க பூபதி யென்பான் கஞ்சனூர் வந்து, ஹரதத்தாசாரிய ஸ்வாமிகளைத் தரிசித்து அவர் பாதங்களில் நமஸ்கரித்து நின்றான். ஸ்வாமிகளும் அருள் கூர்ந்து அவனுக்குப் பஞ்சாக்ஷரோபதேசம் செய்தார். அரசனும் உள்ளம் பூரித்து, அவருக்கு கனகாபிஷேகம் செய்து விடை பெற்றுப் போனான்.
ஸ்ரீ ஹரதத்தாசாரியார் பிரம்மசர்ய விரதமனுஷ்டத்து வந்தார். சில வருஷங்கள் சென்றன. அடிக்கடி சிவலிங்கபூபதியும் கஞ்சனூர் வந்து, ஸ்வாமிகளைத் தரிசித்து அவருக்கு வேண்டிய ஸெளகர்யங்களைச் செய்து, அவர் ஆசீர்வாதம் பெற்றுப் போவான்.
நிற்க, சைவ அக்ரஹாரத்தில், வாதுல கோத்ரத்தில் ஸுப்ரதீகர் என்ற சிவ பக்தர் செய்த தவத்தின் பயனாய் ஸாக்ஷாத் மகாலக்ஷ்மியே அவருக்குப் புத்ரியாக அவதரித்து கமலாக்ஷியென்ற பெயருடன் வளர்ந்து வந்தாள்.
ஒரு சமயம் சிவலிங்க பூபதியார் வாஸுதேவருடன் ஸம்பாஷித்துக் கொண்டிருக்ககையில், ஆசார்யாருக்கு விவாகத்திற்குரிய பருவம் வந்துவிட்டதென்று சொல்ல, பக்கத்தில் வீற்றிருந்த ஸுப்ரதீகர் தனது பெண்ணை அங்கீகரிக்கும்படி வேண்டினார். வாஸுதேவரும் மற்ற பெரியோர்களும் அவர் வார்த்தையை அங்கீகரித்தார்கள். உடனே ஜோதிடர்களைக் கூப்பிட்டு ஒர் சுப மூகூர்த்தம் பார்த்தார்கள். சிவலிங்கபூபதி நேரில் இருந்து வெகு விமரிசையாக ஸ்ரீ ஹரதத்தருக்கும், கமலாக்ஷிக்கும் விவாகத்தை நடத்தி வைத்தான். வந்திருந்த ஜனங்கள் எல்லோருக்கும் பட்டுகளையும் பீதாமபரங்களையும் வழங்கினான். ஆசார்யாரையும் கமலாக்ஷியையும் முத்துச் சிவிகையிலேற்றி ஊர்வலம் செய்து வைத்தான். கோவிலில் அக்னீச்வர மகாலிங்கத்துக்கும் கற்பகாம்பிகைக்கும் விசேஷமான அபிஷேகாதி ஷோட சோபசாரங்கள் விமரிசையாகச் செய்தான். வேதவிதிப்படி விவாஹம் விமரிசையாக நடந்தேறியது.
ஸ்ரீ ஹரதத்தரும் கமலாக்ஷியும் இல்லற தர்மத்தை வெகு ஒழுங்காகவும் சிவபக்தியில் ஈடுபட்டவர்களாகவும் நடத்தி வந்தார்கள். ஸ்ரீ ஹரதத்தர் பிரதிதினம் காலையில் காவேரியில் ஸ்நானம் செய்து ஸந்தியோபாஸனம் செய்து காயத்ரீ ஜபம், ஹோமம், சிவபூஜை முதலியன செய்து, அக்னீச்வரை வணங்கி, பின்னர்த் திருக்கோடிகா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை, என்ற ஆறு ஸ்தலங்களையும் தரிசித்து வணங்கி, பிறகு மாத்யான்னிக ஸ்நானம் செய்து, சிவபூஜை முடித்து, அதிதி யாராதனை செய்து, பின்னர் ஸாயங்காலம் அனுஷ்டானங்களைச் செய்து, சிவதர்சனம் செய்து வந்தார். அவருடைய பத்னியார் கணவருக்கு வேண்டிய சிச்ரூஷைகளையும் சிவபூஜைக்கு வேண்டிய ஸாதனங்களையும் பக்தியுடன் செய்து வந்தாள். ஒழிந்த நேரங்களில் ஹரதத்தர் சிவ கதைகளைச் சொல்லியும் சிவ மகிமைகளை கிரந்தங்களாக எழுதியும் காலக்ஷேபம் செய்து வந்தார். உலகத்தார் உண்மையறிந்து உய்யும் பொருட்டு சிவபரத்வத்தைப் பற்றிய ச்லோகங்கள் பல பல எழுதினார்.
  • மிகவும் கீர்த்தி வாய்ந்த, தினப்படி பாராயணத்துக்கு யோக்யதையான “பஞ்சரத்னம்” தச ச்லோகங்களைக் கவனம் செய்தார்.
  • “ஹரி ஹர தாரதம்யம்” என்று 100 ச்லோகங்கள் கொண்ட ஒர் கிரந்தம் எழுதினார்.
  • கடவுளுக்கு ஸாதாரண மலர்களால் போடப்படும் மாலை மறுநாள் வாடு விடுகிறதேயென்று மனம் வாடி, வாடமாலையாக ஒரு மாலை சூட்டினார். அது தான் ‘சுருதி ஸூக்தி மாலை’ யென்ற கிரந்தம்.
  • ‘சதுர் வேத ஸாரஸங்கிரஹம்’ என்று பெயர் கொண்டது. நான்கு வேதங்களிலும் ஸாரமான சுருதிகளால் சிவபரத்வத்தை ஸ்தாபித்த நூல்.

அற்புதங்கள் :-

ஒரு சமயம் ஸ்வாமிகளின் மாத்யான்னிக ஸ்நானம் செய்து சிவலிங்க பூஜை செய்கையில் ஒரு நாய் தாகமேலிட்டு அபிஷேக ஜலத்தை ஏந்திச்சாப்பிடுமாறு நாக்கை நீட்டிற்று, அப்பொழுது ஆசார்யார் அந்தச் சங்காபிஷேக ஜலத்தை நாயின் நாவிலே விட்டு, மிஞ்சிய ஜலத்தை சிவலிங்கத்திற் கபிஷேகம் செய்தார். பூஜையை தர்சனம் செய்து கொண்டு ஸமீபத்திலிருந்தவர்கள் ஆசார்யருடைய மனோபாவம் தெரியாமல் தயங்கி நிற்க, ஆசார்யார் தன் பேரில் உள்ள அன்பினால் சிவபெருமானே நாய் ரூபத்தில் தன்னைக் கடாக்ஷிக்க வந்தார் என்று தெரிவித்தார். அவ ருக்குச் சிவபெருமானிடத்தில் அன்பின் திடத்தையும், ஸகல ஜீவராசிகளிடத்தும் அவர் வைத்திருந்த சிவதத்துவத்தையும் ஜனங்கள் அறிந்து அதிசயித்தார்கள்.

பின்னொருநாள் சிவலிங்க பூபதியானவர் ஒர் உயர்ந்த பட்டு பீதாம்பரத்தை ஸ்ரீ அக்னீச்வரருக்குச் சாத்தும் படியாக ஒர் பிராம்மணர் மூலம் கொடுத்தனுப்பினார். அவர் வந்த ஸமயம் ஆசார்யார் அக்னீ ஹோமம் செய்யும் ஸமயமாக விருந்தது. ஹோமாக்னியே அக்னீச்வர ஸ்வரூபம் என்ற திடபுத்தியுடன் அக்னீச்வர ப்ரீத்யர்த்தமாக, அந்தப் பீதாம்பரத்தை அக்னீயிலேயே ஆகுதி செய்து விட்டார். பீதாம்பரம் க்ஷணப்பொழுதில் எரிந்து சாம்பலாயிற்று வந்த பிராம்மணர் ஆச்சர்யப்பட்டாலும் ஆசார்யார்முன் வாய்திறக்கவில்லை. விடை பெற்றுக் கொண்டு அரசனிடம் நடந்த விஷயத்தைத் தெரிவித்தார். அரசனும் உண்மையறியத் திறனில்லாது மயங்கினான். ஸாயங்காலம் ஸ்வாமிகளைத் தரிசனம் செய்த போது, மிகவும் பயபக்தியுடன், காலையில் அனுப்பிய பீதாம்பரம், ஸந்நிதானத்தில் சேர்ந்ததோ வெனக் கேட்டான். ஸ்வாமிகளும் அது நல்ல ஸமயத்தில் சேர்ந்ததென்றும் அக்னீச்வரருக்கு அர்ப்பண மாந்தென்றும் சொன்னார். அப்பொழுதும் அவனுக்கு மனம் தெளியவில்லை. ஆனால் ஆசார்யாருடைய மகிமையை யறிந்தவனாதால், அவரை மேற்கொண்டு போய் ஈச்வர தர்சனம் செய்கையில், தான் அனுப்பிய பீதாம்பரம் அக்னீச்வர மகாலிங்கத்தின் மேல் சாத்தப்பட்டிருந்த அற்புதம் கண்டு மனம் தெளிந்தான்.
ஒரு நாளிரவில் ஒரு பிராம்மணர் மாட்டுக் கொட்டியில் இளம் பசுங்கன்று கட்டியிருந்ததைப் பார்க்காமல் அதன் மீது வைக்கோல் பொதியைப் போடவே சிறிது நேரத்தில் அது மரித்து விட்டது. பொழுது விடிந்து விஷயம் தெரிந்த பிராம்மணர் மிகவும் துக்கித்துத் தாம் அறியாமற் செய்த கோவத்ஸஹத்திக்குப் பிராயச்சித்தம் சொல்லும்படிப் பல பிராம்மணர்களைக் கேட்டார். அவர்கள் ஒரு முகமாய் கோஹத்திக்குப் பிராய்ச்சித்தமே கிடையாதென்று சொல்லி அவரை ஜாதிப்ரஷ்டம் செய்து விட்டார்கள். அவர் ஸ்ரீ ஹரதத்தாசார்யாரே கதி யென்று அவர் வீட்டுக்குள் நுழையும் போது வாயிற்படி தலையில் இடிக்க “சிவ சிவ” வென்று சொல்லிக் கொண்டே நுழைந்தார். அந்த வார்த்தைகள் உள்ளேயிருந்த ஆசார்யார் காதுகளில் விழ, அவர் யாரோ பெரிய சிவபக்தர் வருகிறறென்று பரபரப்புடன் ஓடி வந்து பிராம்மணரை நமஸ்கரித்து உபசாரம் செய்தாள். பிராம்மணர் தான் உபசாரத்திற்கு அருகனல்ல வென்று தன் விருத்தாந்தத்தைத் தெரிவித்தார். ஸ்வாமிகள் அவரைத் தேற்றி “பயப்படாதீர்” ஒர் முறை “சிவ” என்ற மாத்ரத்தில் உம்முடைய பாபம் நீங்கிற்று. மறுமுறை சொன்னதால் மோக்ஷமும் அடைவீர் என்றார். பிராம்மணர் அவரை வணங்கி, உற்சாகத்துடனும் தெளிந்த மனதுடனும் விடை பெற்றுக் கொண்டார். ஊர் பிராம்மணர்களுக்கு ஸந்தேகம் தீரவில்லை. ஆகவே ஸாயங்காலம் ஆசார்ய ஸ்வாமிகள் கோவிலில் தர்சனம் செய்கையில் தங்கள் ஸந்தேகத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். “சிவ” என்று சொன்ன மாத்ரத்தில் கோஹத்தி பாபமும் அகலும் என்று அருளிய தங்கள் வாக்கை நாங்கள் நம்புகிறோம். ஆயினும் எங்களுடைய அஞ்ஞான மனது தெளிவடையும் வண்ணம் அதற்கு அத்தாக்ஷியாக ஏதாகிலும் ஒர் பிரத்யக்ஷ ப்ரமாணம் செய்து காட்ட வேண்டு” மென்று பிரார்த்தித்தார்கள். ஒருவர் பிராகாரத்தில் முளைத்திருந்த அருகம்புல்லை ஒரு பிடி கொணர்ந்து “இதோ மகாலிங்கத்திற் கெதிரில் இருக்கும் இக்கல் நந்தி, இந்த அருகம்புல்லைத் தின்னும்படிச் செய்தால் எங்கள் மனம் தெளிவடையும்” என்றார். ஸ்வாமிகள் அந்தப் புல்லை வாங்கி, பிராம்மணர் கையில் கொடுத்து, நந்தியிடம் காட்டச்சொல்ல, அது தன் முகத்தைத் திருப்பி நாவை நீட்டி புல்லை வாங்கி மென்று தின்றது. எல்லாரும் சிவநாம மகிமையை யுணர்ந்து மனமகிழ்ந்து ஆசார்யாரையும் புகழ்ந்தார்கள்,
ஒரு ஸமயம் வாசலில் நெல் உலர்த்தி இருந்தது. அதை ஒரு காளை தின்ன வந்தது. ஆசார்யார் ஸமீபத்தில் போய், நெல்லைக் கூட்டிக் கூட்டிக் காளைக்கும் கொடுத்து உண்பித்தார். அவர் தாயார் இதைப் பார்த்து விட்டு அஞ்ஞானத்தினால், அந்தக் காளையை அடித்து விரட்டினாள். ஹரதத்தர் “அம்மா, என்ன கார்யம் செய்தார்! வாயில்லா ஜீவணாயிற்றே!” என்று துதித்தார். தாயார் “ஸாயந்திரம் சிவ பூஜா நிவேதனத்துக்கு அரிசியில்லை. இந்த நெல்லைத்தான் குத்தி உபயோகிக்கவிருந்தது என்று பதில் சொன்னாள். இது நடந்த ஏழெட்டு நாழிகைக்குப் பின் சிவலிங்கபூபதி யிடமிருந்து 200 அரிசி மூட்டைகள் வந்திறங்கின. தாயாரும் வந்து பார்த்து ஆனந்தமடைந்தாள். அரிசியைக் கொணர்ந்த ஸேவகர்கள் அரசர் 400 மூட்டைகள் அனுப்பியதாகவும் வழியில் 200 மூட்டைகள் நதி ப்ரவாகத்தில் போய் விட்டதென்றும் சொல்லி வருந்தினார்கள். ஆசார்யார் அவ்விதம் போனது கடவுள் செயலெனத் தேற்றி தாயாரைப் பார்த்து “நெல்லைத் தின்ற காளையைப் பாதி தின்னும் போதே அடித்து விரட்டினதன் பலனாக, பாதி அரிசி மூட்டைகள் நமக்குக் கிட்டவில்லையென்று விளக்கிக் காட்டினார்.
மறுநாள் ஆசார்யார் மனைவி முற்றத்தில் அரிசி களைந்து கொண்டிருக்கையில் ஏதோ அவஸர வேலையாக உள்ளே போக நேர்ந்தது. அது ஸமயம் ஒரு நாய் வந்து அந்த அரிசியைத் தின்ன மனைவியார் ஒரு அரிவாளை அந்த நாய் மீது விட்டெறிந்தாள். அதுவும் விதிவசத்தால் இறந்து விட்டது. இது விஷயம் ஆசார்யாருக்குத் தெரிந்த போது நாய் ஸ்பர்சிக்கும் படி வைத்திருந்தது மனைவியின் குற்றமேயென்று சொல்லி, மனம் வருந்தி, இறந்த நாயைத் தன் மடியில் போட்டுக் கொண்டு அதற்கு விபூதி பூசி, ருத்ராக்ஷமணிந்து அதன் காதில் பஞ்சாக்ஷர உபதேசம் செய்தார். உடனே ஆகாயத்திலிருந்து ஒர் விமானம் வர நாய் தனது பூத சரீரத்தை விட்டு, தேவசரீரத்தை யெடுத்துக் கொண்டு, கைலாஸம் சென்றது, ஹரதத்த்ர் மனம் ஒருவாறு திருப்தியடைந்தது.
ஆயினும் தன் தாயார் காளையை யடித்த பாபத்திற்கும், மனைவி நாயைக் கொன்ற பாபத்திற்கும் தக்க பிராயச்சித்தம் விதித்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்து ஒரு ஒலையில் ‘தெரிந்தும், தெரியாமலும் செய்த பாபங்கள் மகத்தான பாபங்களாக விருந்தாலும்’ என்ற கருத்துடைய – (ச்லோகத்தின்) முதல் வரியை எழுதினார். 


ஞானாக்ஞான ப்ரயுக்தானாம் பாபனாம் மகதாயி

இரண்டாவது வரி சீக்ரம் உதிக்கவில்லை, ஒலையைக் கூறையிற் சொருகிவிட்டுக் காவேரிக்குச் சென்றார். அப்பொழுது பகவானே, ஹரதத்தர் ரூபத்தில் வீட்டுக்கு வந்து சொருகியிருந்த ஒலையை எடுத்து ச்லோகத்தைப் பூர்த்தி செய்து விட்டுப் போனார். ஆசார்யார் ஸ்நானம் அனுஷ்டானாதிகளை முடித்துக் கொண்டு, வீட்டுக்கு வந்து சிவபூஜையும் செய்து போஜனத்துக்குப் பின் ச்லோகத்தைப் பூர்த்தி செய்வதற்காக ஒலைச் சுருளை யெடுத்தார். அதில்


ஏகாந்த நிஷ்க்ரதி: சம்போஸ் ஸக்ரு தேவ ஹி கீர்தனாத்

என்று 2 வது வரி எழுதப்பட்டு, ச்லோகம் பூர்த்தியாகியிருந்தது (அதாவது ஏகாந்தத்திலிருந்து சிவ நாமாவை உச்சரித்தலே பிராயச்சித்தமாம் என்று அர்த்தம்) ஸ்ரீ ஹரதத்தர் பரம ஆச்சர்யமடைந்து மனைவியை அழைத்து விசாரிக்க, அவள் “ஸ்நானத்திற்குப் போன நீங்கள் தான் திரும்பி வந்து, ச்லோகம் எழுதி வைத்து மறுபடி ஸ்நானத்திற்குப் போனீர்களே” என்றாள். ஸ்வாமிகள் ஆஹா! ஸாக்ஷாத் பரனேச்வரனே இவ்வாறு அருள் புரிந்தாரென ஆனந்தக் கூத்தாடினார். அதே ப்ரகாரம் தன் தாயாருக்கும் மனைவிக்கும் பிராயச் சித்தம் செய்து வைத்தார்.
ஸ்ரீ ஹரதத்தர் ஒரு நாள் சிவத்யான பராயணராய் பிரம்மயக்ஞம் செய்யும் பொருட்டு காவேரி நதிக்குப் போனார். அப்போது நதிக்கரையில் ஒர் புலையனும் அவன் மனைவியும் பேசிக் கொண்ட ஸம்பாஷணை காதில் விழுந்தது. அவர்கள் அக்கரைக்குப் போக வேண்டியவர்கள். காவேரியில் முழங்கால் அளவு ஜலமே ஓடிக் கொண்டிருந்தபடியால் மனைவி ஆற்றில் இறங்கி சுலபமாக அக்கரை போய்விடலாமென்றாள். அதற்கு அவள் புருஷன் “அடீ, நாம் அவ்வாறு போகக்கூடாது. கங்கையைக் காட்டிலும் காவேரி புனிதமான நதியென்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன் கீழ்த் தரையில் இருக்கும் ஒவ்வொரு மணலும் ஒர் சிவலிங்கமென்று பெரியோர்கள் சொல்வார்கள். நாமோ கர்ம வசத்தால் புலையராய்ப் பிறந்து விட்டோம். கரையிலிருந்தபடியே ஒர் பாத்ரத்தில் ஜலத்தை எடுத்து, காவேரி ஸநானம் செய்து நம்முடைய பாபத்தை போக்கிக் கொள்ளலாம். ஆனாலும் இந்த கர்ம சரீரத்துடன் காவேரி நதியில் இறங்கி நம்முடைய கால்களால் சிவலிங்கங்கள் மீது மிதிக்க வேண்டாம். கொஞ்ச தூரம் சென்றால் மூங்கிற்பாலம் இருக்கிறது. அதன் மேல் நடந்து அக்கரை சேரலாம்” என்று உபதேசம் செய்து கொண்டிருந்தான். அந்தப் புலையனின் ஞானம் முதிர்ந்த மொழிகளைக் கேட்ட ஸ்ரீ ஹரதத்தர் அவன் ஸமீபம் சென்று அவனை வணங்கி, ஆடந்தக் கூத்தாடினார். புலையன் மனம் பதறி “ஸ்வாமீ, பெரியவரே, தாங்கள் என்னை நமஸ்காரம் செய்யலாமா! என்னைத் தொடலாமா!” வென்று கூறி ஸ்ரீ ஹரதத்த சிவாசார்யார் “அய்யனே! உன்னைப் போல் சிவதத்வ ஞானம் கொண்டவர்களை நான் இது வரையில் பார்த்ததில்லை. காவேரியின் மகிமையை நீ தெரிந்து கொண்டவாறு வேறு யார் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்? 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், 18 புராணங்கள், 108 உபநிஷத்துக்கள் தெரிந்து விட்டதாகப் பாவித்துக் கொண்டிருப்பவரிடம் கூட உன்னுடைய மனோ பாவம் பிரதிபலிக்கவில்லை. நீ யல்லவோ உண்மையில் கற்றவன். சிவதத்வமறிந்தவன். “உலகத்தில் பலர் கேவலம் ஞானத்தை மாத்ரம் அவலம்பிக்கிறார்கள். மற்றும் பலர் கர்மத்தை அவலம்பிக்கிறார்கள் நானோ ஞானவானல்ல. சாஸ்திரக்ஞனல்ல. கர்மாக்களையும் சரிவரச் செய்கிறேனென்று சொல்ல முடியாதி. ஆனால் ஒன்று சொல்வேன். நான் சிவ பக்தர்களுடைய பாதரக்ஷயை அவலம்பிக்கின்றேன். சிவதத்வமறிந்த நீ தான் நான் வணங்கும் தெய்வம் சிவம்” என்று கண்களில் ஆனந்த பாஷ்யம் பொழியச் சொன்னார்.
[என்னே, ஸ்ரீ ஹரதத்தரின் பெருமை! இந்த “சிவ பக்தானாம் பாத ரக்ஷாவலம் பிந:” என்ற நிலையில் தான் ஸ்ரீ ஹரதத்தர் இரண்டாம் வயதுக் குழந்தைப் பருவம் முதல் இருந்து வந்தார்.
திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்
 
“அங்கமெல்லாங் குறைந்தழகு தொழுநோயராய் 
 ஆவரித்துத் தின்ற்ய்ழலும் புலையரேனுங் 
கங்கைவார் கடைக் காந்தார்க் கன்பராகில்
 அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே”
                              
என்ற இதே மனோபாவத்தை அருளியிருக்கிறார். ] சோழ மகாராஜன் இவருடைய மகிமைகளைக் கேட்டு இவரை அண்டி நமஸ்கரித்து பாத காணிக்கைகள் ஸமர்ப்பித்து “அடியேன் இந்த சரீரத்துடன் கைலாஸம் போக விரும்புகிறேன்; அருள் புரிய வேண்டு” மென்று வணங்கினான். ஆசார்யாரும் கிருபை கூர்ந்து, கஞ்சனூர் முதலாக ஏழு சிவ ஸ்தலங்களையும் அரை யாமத்தில் தரிசித்து வந்தால் அவன் எண்ணம் ஈடேறுமென்று சொன்னார். அரசனும் ஸந்தோஷித்து, அவர் ஆசீர்வாதம் பெற்று பஞ்ச கல்யாண குதிரை மீதேறி குடைபிடித்தவன் ஸமீபத்தில் ஓடிவர, ஆறு ஸ்தலங்களையும் அரையாமத்தில் தரிசித்து மறுபடி அக்னீச்வரர் ஆலயம் வந்து, குதிரையையும் குடைபிடித்தவனையும் வெளியே நிறுத்தி, கோயிலுக்குள்ளே போய் ஸ்வாமிகளை வணங்கினான். வாயு வேகமாக ஓடிவந்த குதிரையும் குடை பிடித்தவனும் களித்து மூர்ச்சித்தார்கள். அந்த க்ஷணமே கைலாஸத்திலிருந்து விமானம் வர குதிரையும் குடை பிடித்தவனும் அதிலேறிக் கைலாஸம் போனார்கள். அந்த அதிசயத்தைக் கண்ட சோழராஜன் தானும் சுற்றி வந்தும் தனக்கு மட்டும் அந்த பாக்யம் கிடைக்கவில்லையே என்று வருந்தி நிற்கையில் ஹரதத்தர் “ராஹன், குதிரையும் குடை பிடிப்போனும் பாதசாரிகளாகச் சுற்றி வந்த படியால், பாக்யம் பெற்றார்கள். குதிரைமேல் ஸுகமாக ஸவாரி செய்த உமக்கு அதே பாக்யம் எப்படிக் கிட்டும்?” என்றார். ராஜனும் தன் தவறை யுணர்ந்து மறுபடியும் பக்தியுடன் ஏழு ஸ்தலங்களையும் பாதசாரியாகச் சுற்றி வர, அவனுக்கும் விமானம் வந்தது. ஸ்ரீ ஹரதத்தரை நமஸ்கரித்து அவர் ஆசீர்வாதம் பெற்று விமானம் ஏறிக் கைலாஸம் சென்றான்.
கிருஹஸ்தாச்ரம் தர்மத்தை விதிப்படி நடத்தி வந்த ஹரதத்தாசாரியார் ஸ்வாமிகளுக்கு எட்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் பிறந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஈச்வரன் ஈச்வரி நாமாக்களையே வைத்தார். அக்னீச்வரன், மகாதேவன், நீலகண்டன், சங்கரன், சந்திரசேகரன், சம்பு, மத்யார்ச்சுனேச்வரன், கோவடுநாயகன், என்று பிள்ளைகளுக்கும், கற்பகாம்பிகை, மீனாக்ஷியென்று பெண்களுக்கும் பெயரிட்டார். ஒர் ஸமயம், அக்னீச்வரர் ஆலயத்தில் ரதோத்ஸ்வம் நடைபெற்றது. எல்லாப் பெண்களும் குழந்தைகளும் நானாவித பட்டாடைகள் உடுத்தி, விலை உயர்ந்த ஆபரணங்களும் போட்டுக் கொண்டு உத்ஸவத்தில் ஈடுபட்டார்கள். ஆசார்யாரின் குழந்தைகளுக்கும் நல்ல பாவாடைகளும் நகைகளும் வேண்டுமென்று ஆசை. ஆசார்யார் தன்க்கென்றோ, தன் குடும்பத்திற்கென்றோ யாதொரு திரவியமும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவர். ஆகவே குழந்தைகளைப் பார்த்து பின்வருமாறு ஸமாதானம் சொன்னார். “நீங்கள் பூசும் விபூதியும் குங்குமமும் சரீரத்துக்கு ஆபரணம். சிவநாம ஸ்தோத்ரங்களையும், சிவன் பெருமைகளையும் கேட்பதுவே காதுகளுக்கு அலங்காஅரம். சிவாலயப்ரதக்ஷணம் செய்வதே பாத பூஷணம்” என்றார். குழந்தைகள் “தந்தையே! தாங்கள் சொன்ன ஆபரணங்கள் எல்லாம் இருக்கின்றன, உண்மைதான். ஆயினும் மற்ற குழந்தைகளைப் போல் லெளகீக ஆபரணங்களும் ஒரு முறையாவது அணிந்து கொள்ள விரும்புகிறோம்; தாங்கள் ஈச்வரனை ஸ்மரித்தால் இவைகளை யடைவது அரிதா?” வென்றார்கள். குழந்தைகள் ஈச்வர பக்தியில் வைத்த அபிப்ராயம் ஸித்தியாக வேண்டுமென்ற விருப்பத்துடன் பகவானை தியானித்தார். சிறிது நேரத்திற் கெல்லாம் ஒரு காளை அவ்வழியே போக, ஆசார்யார் குழந்தைகளைப் பார்த்து “அந்தக் காளையின் குளம்புகள் பதித்த இடங்களில் தேவையான ஆபரணங்கள் கிடைக்கும். எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அதே பிரகாரம் விலைமதிக்கொணாத நவரத்னாபாணங்கள் அனேகம் கிடைக்க, குழந்தைகளும், தாயாரும் அவைகளை யணிந்து கொண்டு மகிழ்வெய்தினார்கள்.
ஒர் இரவு திருவாவடுதுறையில் ஸ்ரீ கோவடு நாயகரைத் தரிசித்து வீட்டுக்குத் திரும்புகையில், இடியும் மழையுமாக விருந்தபடியால் வழி தெரியாது சிரமப்பட்ட போது, கோவடு நாயகரே ஒர் இடையன் போல் வந்து அவருக்கு வழிகாட்டி, வீடு சேர்த்தார். ஆசார்யார் இடையனைச் சாப்பிட்டுப் போகும்படி உபசரிக்க அவன் ‘கையில் கொடுத்து விடுங்கள், வீடு போய் மனைவி மக்களுடன் சாப்பிடுகிறேன்’ என்று சொல்ல, ஹரதத்தர் பாகற்காய்க் குழம்பும் அன்னமும் நல்ல புத்துருக்கு நெய் விடுக் கலந்து கொடுத்தனுப்பினார். மறுநாட் காலையில் கோயில் ஸந்நதியில், பாகற் காய்க் குழம்பும் சாதமும் சிதறியிருந்ததைப் பார்த்த அர்ச்சகர்கள் பரிசாரகர்களைக் கண்டிக்க, கடவுளே அசரீரி வாக்கால், தான் முதல் நாள் இரவு ஹரதத்தர் சாரியாருக்குத் துணைசென்ற திருவிளையாடலைத் தெரிவித்தார். அது கேட்ட ஜனங்கள் எல்லாரும் சிவானுக்ரஹம் பரிபூர்ணமாகப் பெற்ற ஹரதத்தாசாரியாரைப் பலவாறு புகழ்ந்தார்கள். ஈச்வரனின் இந்தத் திருவிளையாடலைக் கேட்டறிந்த ஹரதத்தரும், மெய்சிலிர்த்து கடவுள் கருணையைப் போற்றினார்.
த்ரியம்பகர் என்று ஒர் பிராம்மணர் ஒர் யதீச்வரரிடம் வெகுகாலம் சிஷ்யராக விருந்து வேதங்கள் பயின்று பஞ்சாக்ஷர உபதேசமும் பெற்றார். பின்னும் கொஞ்ச காலம் கழித்து, குருவை வணங்கி, பஞ்சாக்ஷரத்திற்கும் மேலான மந்திரமிருந்தால், அதையும் உபதேசம் செய்ய வேண்டுமென்று பிரார்த்தித்தார். பஞ்சாக்ஷரத்திற்கு மேலான மந்திரம் கிடையாதென்ற உண்மையை யறியாத மூடனாகயிருக்கிறான் என்று வருந்தி, அவன் மேல் இரக்கங்கொண்டு “இன்னும் சில ரகஸ்யம் உண்டு; நாளடைவில் கூறுகிறேன்” என்று சொன்னார். சில வருஷங்கள் கழிந்தன. ஒரு நாள் த்ரியம்பகர் உணவின் பொருட்டு வெளியே போயிருந்த போது, தனது அந்திய காலம் நெருங்கிணதை உணர்ந்த யதீச்வரர், சிஷ்யனுக்கு அருள் செய்ய வேண்டுமென்று கருணையுடன் “பஞ்சாக்ஷர மந்திரத்திற்கு மேலான மந்திரம் வேறு ஒன்றும் கிடையாது” என்பதாக நிலத்தில் எழுதி வைத்து உயிர் நீத்தார். யதீசரர் பூமியில் ஏதோ உபதேசம் எழுதியதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒர் தாஸி, அவ்வாக்யத்தைத் தன் காது ஒலையில் எழுதி வைத்துக் கொண்டு எழுத்துக்களை யழித்து விட்டுப் போய் விட்டாள். வெளியே போயிருந்த த்ரியம்பகர் திரும்பி வந்டு, தன் குரு இறந்திருப்பதைக் கண்டு அவருக்குச் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்து விட்டு, குருவிடம் பஞ்சாக்ஷரத்திற்கு மேலான மந்த்ரோப தேசம் தனக்கு ஸித்திக்க வில்லையே என்று வருந்தியிருக்கும் போது, சிலர், யதீச்வரர் ஏதோ பூமியில் எழுதி வைத்த தாகவும் ஒர் தாஸி அந்த வாக்யத்தைத் தன் காது ஒலையில் எழுதிக் கொண்டு போனாளென்றும் சொல்ல, திரியம்பகர் அந்த தாஸியின் வீட்டை விசாரித்துக் கொண்டு போய் அவளைக் கண்டு தன் குர்வின் உபதேச மொழியைத் தெரிவிக்கும்படி கேட்டார். அவள் தன்னுடன் சில காலம் வாழ்ந்து தன்னை மகிழ்வித்தால், காதோலையத் தருவதாகச் சொல்ல, த்ரியம்பகரும் ஸம்மதித்து அவளுடன் சில காலம் வாழ்ந்து, அவளை மகிழ்வித்து, காதோலையைப் பெற்று குருவின் கடைசி உபதேசத்தையுணர்ந்து பஞ்சாக்ஷரத்திலும் மேலான மந்திரம் கிடையாதென்று மனம் தெளிந்தார். ஆயினும் தான் சிலகாலம் வேசியுடன் வாழ்ந்த பாபம் போவதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலா மென்று கவலையுடனிருந்த போது தைப்பூசம் புண்ய தினம் வர, திருவிடைமருதூர் மகாலிங்கத்தை தரிசனம் செய்து, ஸ்வாமி காவேரியில் தீர்த்தம் கொடுத்த போது காவேரியில் ஸ்நானம் செய்து, வரும் வழியில் ஸ்ரீ ஹரதத்தாசாரியார் வீட்டில் போஜனம் வேண்டுமென்று கேட்க, ஸ்ரீ ஹரதத்தர் அவருடன் பந்தியில் உட்கார்ந்து போஜனம் செய்வித்தார். சிலர் ஆசார்யரிடம் போய் “த்ரியம்பகர் தூராசரம் உடையவர்” வேசியுடன் பழகியவர், அவருடன் ஸம போஜனம் செய்தல் தருமோ தகாதோ” என்று ஐயுற்றனர். ஆசார்யார் தைப்பூடம் திருநாளன்று காவேடியில் நீராடி மகாலிங்கத்தை தர்சனம் செய்த்தால் அவர் பாபம் நீங்கி விட்டதென்றார். அப்பொழுதும் ஜனங்கள் அந்த வுண்மைக்குப் பிரதக்ஷ சாக்ஷ்யம் வேண்ட, ஆசார்யார் த்ரியம்பகரைப் பார்த்து, நீர் இந்த ஜனங்களுடன் திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமான் ஸந்நதி சென்று பரமேச்வரனைப் பார்த்து தைப்பூசத்தில் காவேரியில் ஸ்நானம் செய்து அவரைத் தரிசனம் செய்ததால் உம்முடைய பாபம் போய் விட்டதா வென்று கேளு மென்றார். த்ரியம்பகரும் அவ்வாறே சென்று கேட்க, பரமேசரன் ஆசரீயாய் “குழந்தாய் நீ செய்த பாபம் ஒழிந்து விட்டது” என்று அருள்புரிந்தார். அப்பொழுதும் மனம் தெளியாத சிலர் மறுபடியும் ஹரதத்தரை வேண்ட, அவர் அன்னாரின் அஞ்ஞானத்தைக் கண்டு மனமிரங்கி அவர்கள் பொருட்டு, ஈச்வரன் ஸந்நதி சென்று த்ரியம்பகரை மீண்டும் ஒர் முறை பகவானைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்க சொன்னார். பரமேச்வரனும் அசரீரியாக இடி இடித்தாள் போன்ற உரத்த குரலில் தம்மைத் தரிசித்ததாலும் காவேரியில் நீராடினதாலும் பாபம் ஒழிந்து தென்று அருளினார். எல்லா ஜனங்களும் மனம் தெளிந்து ஆசார்யாரின் மகிமையையும் தைப் பூச ஸ்நான விசேஷத்தையும் அறிந்து மகிழ்ந்தனர்.
ஸ்ரீ ஹரதத்தாசாரியாருடைய சகோதரிக்கு ஒர் புதல்வர் முடவராக விருந்தார். (அவரை நாம் கங்காதரன் என்ற பெயரால் அழைப்போம்) அவர் காசி போய் கங்கா ஸ்நானம் செய்ய விரும்பி ஹரதத்தாசாரியரைப் பிரார்த்தித்தார். அவர் கங்காதாரை அந்த ஊர் பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து வரும்படிச் சொன்னார். பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த கங்காதரர் காசியில் மணிகர்ணிகா கட்டத்தில் எழுந்தார். காசி விச்வேச்வரரையும் விசாலாக்ஷியம்மையையும் தரிசித்துக் கொண்டு சிலகாலம் வாழ்ந்தார். ஒரு நாள் விச்வேச்வரர் ஆலயத்திற்கு சமீபத்தில் விபூதியிட்ட ஒர் மகா புருஷர் தன் பத்னியுடன் சொக்கட்டானாடிக் கொண்டிருந்தார். அவர் கங்காதாரைப் பார்த்து க்ஷேமம் விசாரித்து “உங்கள் கிராமத்தில் காச்யபகோத்ரோத்வரான ஹரதத்தர் என்ற சிவபக்தரும் குடும்பமும் க்ஷேமமாக விருக்கிறார்களா” வென்று விசாரித்தார். கங்காதரர், ஹரதத்தர் தனது மாதுலர்தா மென்றும், எல்லாரும் ஸெளக்யமென்றும் சொன்னார். மகா புருஷர் ‘அவர் க்ஷேமத்தைக் காசியில் ஒருவர் விசாரித்தார் என்று சொல்லும்’, என்றார். பக்கத்திலிருந்த பெருமாட்டியும், புன்சிரிப்புடன் ‘நானும் விசாரித்தேன் என்று சொல்லும்’ என்றாள். கங்காதரர் அவ்விருவர்களையும் நமஸ்கரித்து “நான் ஹரதத்தர் அருளால், பிரம்மதீர்த்தத்தில், ஸ்நானம் செய்து இங்கு எழுந்தேன், இப்பொழுது உங்களுக்குத் திரும்பி போக வகையறியாது இங்கே தாமதிக்கிறேன்’ என்றார். மகாபுருஷர் “ஏன் தயங்க வேண்டும், எப்படியிங்கு வந்தீரோ, அப்படியே திரும்பியும் போகலாமே! ஹரதத்தரை நினைத்து மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்யும்” என்றார். கங்காதரரும் அப்படியே மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்து, கஞ்சனூர் பிரம்ம தீர்த்தத்தில் எழுந்து ஹரதத்தாசாரியாரை நமஸ்கரித்து அவர் கிருபையால் கங்காஸ்நானப் பேறு கிடைத்த மகிமையைச் சொன்னார். ஸ்வாமிகள் அங்கே யாராவது தன்னையறிந்த மனிதர் இருந்தரோ வென்று கேட்க, விச்வேச்வரர் ஆலயத்திற்கு ஸமீபத்தில் ஒர் மகா தம்பதிகள் விசாரித்ததாகவும், அவர்கள் சொற்படி தான் மணிகர்ணிகையில் மூழ்கி கஞ்சனூரில் எழுந்ததாகவும் சொன்னார். ஆசார்யார், காசி விச்வனாதரும், விசாலாக்ஷியம்மையும் தான் தன் க்ஷேமத்தைப் பற்றி விசாரித்திருக்க வேண்டுமென்ற உண்மையையறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். பின்னர் கங்காதாரே ஹரதத்தாசார்யாருக்குப் பிரதம சிஷ்யராக விருந்து அவரழுதிய சில கிரந்தங்களுக்கு வியாக்யானமும் எழுதினார். கஞ்சனூரில் அவர் மூழ்கியெழுந்த தீர்த்ததிற்கு மணிகர்ணிகை தீர்த்தம் என்று பெயர் வழங்கலாயிற்று.
அந்தக் கஞ்சனூரில், சிவப்ரியறென்று ஒர் பிராம்மணோத்தமர் இருந்தார். அவருக்குத் தரும பாலன் ஸுமதி யென்று இரண்டு பாலர்கள் இருந்தார்கள். ஒரு நாள் காலை சிவப்ரியர் காவேரிக்கு ஸ்நானத்திற்குப் போய் காலை யனுஷ்டானங்களை முடித்து, வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள், ஒரு புதல்வன் கூடத்தில் வாந்தி பேதியால் இறந்து கிடந்தான். மற்றவன் தோட்டத்தில் பாம்பு கடியால் இறந்து கிடந்தான். சிவப்ரியர் ஏக காலத்தில் இரண்டு புத்ரர்களும் இறந்து கிடந்ததைப் பார்த்து புத்ர சோகம் மீறிக் கதறினார். அந்த சரீரங்களைக் கட்டிக்கொண்டு புரண்டழுதார். கிராமத்தார் எவ்வளவு தேற்றியும் அவர் துக்கம் சாந்தியடையவில்லை. மேல் நடக்க வேண்டிய கிரியைகளைச் செய்ய மனமில்லாது தவித்ததை கண்டு, கிராமத்தார் ஸ்ரீ ஹரதத்தரிடம் விஷயத்தைத் தெரிவித்தார்கள். அவர் சிவப்ரியரின் புத்ர சோகத்தைக் கேட்டு வருந்தி, அவர் கிருஹம் சேர்ந்து, குழந்தைகளின் சரீரங்கள் மேல் காவேரி நீர் புரோக்ஷணம் செய்து பஞ்சாக்ஷர மந்திரம் ஜெபித்து விபூதியை பூசக் குழந்தைகளுயிருடன் எழுந்து ஹரதத்தரையும் ஏனையோரையும் வணங்கி, முன் பிறப்பில் தாங்கள் சிவப்ரியருக்கு அடிமைகளாக விருந்தாகவும், நியாயமான கூலி தங்களுக்குச் சேராத படியில் அவருக்கே புத்ரர்களாகப் பிறந்து, அவர் அன்னம் சாப்பிட்டதாகவும், அன்றுடன் கடன் தீர்ந்ததாகவும் ஹரதத்தர் விபூதி மகிமையால், உயிர் பெற்றுப் பூர்வ ஜன்ம ஞானமும் ஏற்பட்டதாகவும் விவரங்களைச் சொன்னார்கள். அதே ஸமயம் சிவ கணங்கள் விமானத்தில் வந்திறங்கி, ஹரதத்தர் இட்ட விபூதி மகிமையால் குழந்தைகளுக்குச் சிவலோகப்ராபதி கிடைத்ததென்று சொல்ல, குழந்தைகளும் பூத உடலங்களை விட்டு, தேவ உருவெடுத்து, ஹரதத்தரை நமஸ்கரித்து விமானத்தில் ஏறிச் சென்றார்கள். கூடியிருந்த ஜனங்கள் எல்லாரும் ஹரதத்தரின் சிவபக்தியையும் விபூதி மகிமையையும் போற்றினார்கள்.
இவ்விதமாக சிவப்க்தி மகிமையாலும், சிவநாம மகிமையாலும், விபூதி மகிமையாலும், அனேக வற்புதங்கள் செய்து வாழ்ந்து வரும் நாளில், ஹரதத்தருக்கு வயது ஆகித் தள்ளாமை வந்து, பிரதி தினமும் ஏழு ஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்து வரச் சக்தியிலராய்த் தமது ஆன்மார்த்த பூஜையிலேயே ஏழு ஸ்தலத்து லிங்கங்களையும் ஸ்தாபித்துப் பூஜை செய்து வருவாராயினார். அக்னீச்வரரையும் கற்பகாம்பிகையையும் தன்னை யாட்கொள்ளும் படிப் பிரதி தினமும் பிரார்த்தித்து வந்தார். ஒரு நாள் தை மாதம் சுக்ல பஞ்சமி தினம் காலையில் சிவபெருமான் அவருக்கு ஸாயுஜ்ய பதவி கொடுக்கத் திருவுளம் கொண்டு பார்வதி தேவியாரோடும் ஸகல தேவர்களோடும், ரிசிகளோடும், பிரதம கணங்களோடும், காக்ஷியளித்தார். ஹரதத்தர் சிவபிரானை வணங்கி மெய்மறந்து ஆனந்தக் கூத்தாடினார்.
“ஹே மகாப்ரபோ! அடியேனை யாட்கொள்ள வேண்டும் இந்த அக்ரஹாரத்திலுள்ள பதினான்கு வீட்டார்களையும் அடியேனையும் மீண்டும் ஜன்மம் எடுக்காத முக்தி நெறியிலே சேர்த்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார். பகவான் ‘அவ்விதமே யாகுக’ என்று திருவாய் மலர்ந்தருள, கோடி ஸுர்யப்ரகாசம் கொண்டதும், நவரத்னங்கள் இழைக்கப் பெற்றதுமான ஒர் விமானம் வந்திறங்கியது. அதில் பதின்மூன்று வீட்டுக்காரர்களும் தங்கள் தங்கள் பந்துக்கள் ஸ்நேகிதர்கள் பசுக்கள் உள்பட எல்லாரும் ஏறினார்கள். பதினான்காவது வீட்டில் இருந்த ஒர் வயது முதிர்ந்த கிழவி மாத்திரம் வரவில்லை. ஹரதத்தர் அவருக்கு ஆளனுப்பினார். அவள் ஒவ்வொர் நாளும், விநாயகருக்கு மோதகம் நிவேதனம் செய்வது வழக்கம். ஆகவே “இப்பொழுது தான் மோதங்கள் அடுப்பில் வைத்திருக்கிறேன். அவை நன்றாக வெந்து விநாயகருக்கு நிவேதனம் செய்த பிறகு தான் வரக்கூடும்; கைலைக்கு முந்தி போகிறவர்கள் போகாலா” மென்று சொன்னாள். ஹரதத்தர் அவள் அபிப்ராயத்தைப் பகவானுக்குத் தெரிவிக்க பகவான் புன்சிரிபுடன், பக்கத்திலிருந்த விநாயகரைப் பார்த்தார், விநாயகரும் தந்தையின் திருவுள்ளத்தைத் தெரிந்து கொண்டு அக்னீசுவரர் ஆலயத்தின் பக்கத்திலே கோவில் கொண்டார்.




பிறகு எல்லாரும் விமான மேறிய பின், ஹரதத்தரும் ஏறும் போது அவர் வீட்டில் தன்ம் எச்சில் இலை தின்று வந்த நாயொன்று இரக்கத்தினால் அழ, அதையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டார். விமானம் கைலை நோக்கி கிளம்பியது. கிழவி மோதகம் பக்குவமான பின் எடுத்து, அதிகமான பக்தியோடு நிதானத்தோடும் விநாயகருக்குப் பூஜை செய்து நிவேதனம் செய்தாள். விநாயகர் அவளுடைய பக்தியை நிலை நாட்டும் நோக்கம் கொண்டு வேண்டிய வரம் கேட்டுமாறு சொன்னார். கிழவியும் லோகோபகாரமாக “ஸ்வாமீ, என் போன்ற ஒர் கிழவி தங்களைத் தினம் பூஜித்து வந்த விஷயம் உலகத்தில் நிலைத்து நிற்குமாறு இந்த விடத்தில் ஸாந்நித்யமாக விருந்து உங்கலைப் பக்தியுடன் பூஜித்து, மோதகம் நிவேதனம் செய்யும் ஸகல ஜனங்களுக்கும் கைலாஸ பதவி யருள வேண்டுமென்று பிரார்த்தித்தாள். விநாயகரும் அவ்வாறே செய்வதாக அருளித் தனது துதிக்கையால் அவளை யனைத்துக் கைலையில் சேர்ப்பித்து, அவள் விருப்பத்தின்படி நிரந்தரமாக கோயில் கொண்டார். அவர் கோயில் கொண்ட இடமே இப்பொழுது கற்பகவிநாயகர் கோயில், இன்றைக்கும் கஞ்சனூரில் எல்லா ஜனங்களும் ஹரதத்தர் முக்தியடைந்த தினமான தை மாதம் சுக்ல பஞ்சமி யன்று மோதகங்கள் செய்து கற்பக விநாயகருக்கு நிவேதனம் செய்து நற்கதியடைகிறார்கள். 

நிற்க, கிழவி கைலையில் சேர்ந்து கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான் ஹரதத்தரும் மற்றவரும் ஏறிச் சென்ற விமானம் கைலாஸத்தை யடைந்தது. ஹரத்தாதியார் தங்களுக்கு முன் கைலை சேர்ந்த கிழவியின் மகிமையை யறிந்து உள்ளம் பூரித்தார்கள். இவ்விதமான ஸ்ரீ ஹரதத்தர் சிவாசார்யாரும், அவர் வாழ்ந்த கஞ்சனூர் வாஸிகளும் இக்கலியுகத்தில் கைலாஸம் சேர்ந்து சிரஞ்ஜிவிகளாக என்றும் சிவஸந்நிதானத்தில் விளங்குகின்றார்கள். 

                                                     ஹரஹர நம : பார்வதீ பதயே!
                                                                            ஹர ஹர மகா தேவ !!
                                             
முருகாசரணம் திருச்சிற்றம்பலம்